தொடர்ந்து முதலிடம்.... பிரியாணிக்கு நிகர் பிரியாணியே... ஆன்லைனில் அலறவிட்ட பயனர்கள்
- ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
- கொச்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 368 முறை கறிவேப்பிலையை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது.
இந்த இயந்திரமான வாழ்க்கையில் நம்மில் பலரால் அதிகம் விரும்பப்படுவது பிரியாணி. இதனை நாம் வீட்டில் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடவே பலரும் விரும்புவர். இதனால் இந்தியாவில் ஆன்லைனில் பல உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. இதில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவு டெலிவரி செயலியாக ஸ்விக்கி உள்ளது.
இந்த நிலையில், தற்போது நாம் 2025-ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நடப்பாண்டில் தங்களுடைய ஸ்விக்கி செயலி வாயிலாக எந்த உணவு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்த சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு உள்ளது.
இதன்படி இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி, பர்கர் ஆகியவை முதல் இடத்தை பிடித்திருக்கின்றன. 2025-ம் ஆண்டில் ஸ்விக்கி தளத்தில் மட்டும் 9 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 194 பிரியாணி ஆர்டர் ஸ்விக்கிக்கு வந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2-ம் இடம் பிடித்த மேற்கத்திய உணவான பர்கருக்கு மட்டும் 4 கோடியே 42 லட்சம் மில்லியன் ஆர்டர்கள் வந்துள்ளது. மூன்றாவது இடத்தில் பீட்சா இருக்கிறது. இதன் ஆர்டர், 4 கோடியே 1 லட்சம் வந்திருப்பதாக ஸ்விக்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் கொச்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 368 முறை கறிவேப்பிலையை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது.