வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் - இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது
- உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவியது.
இதுபோன்ற செயற்கைக்கோள்களை இதற்கு முன்பு பிரெஞ்சு கயானாவிலிருந்து தான் ஏவப்பட்டு வந்தது. தற்போது அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைப்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்து ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் பாய்ந்தது. இதில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.1 டன் எடை கொண்ட 'புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பாகுபலி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எஸ்கே பதிவில், "இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்துகிறது.
இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. இதற்காக கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.