திருமண பத்திரிகை அனுப்பினால் வீடு தேடி வரும் ஏழுமலையான் ஆசிர்வாதம்
- வெளிநாடுகளில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் பாரம்பரிய உடை அணிய வேண்டும்.
- இந்தியா வந்தது முதல் 30 நாட்களுக்குள் மட்டுமே சிறப்பு தரிசனம் வழங்கப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமண பத்திரிகைகளை முழு முகவரியுடன் திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடம், கே.டி சாலை, திருப்பதி 51 75 01 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
திருமண பத்திரிகை அனுப்பி வைக்கப்படும் தம்பதிகளுக்கு அட்சதை, மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் ஏழுமலையான், பத்மாவதி தாயார் படங்களுடன் ஆசீர்வாத சிறு புத்தகம், கல்யாண சமஸ்கிருதி புத்தகங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.
இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல் வெளிநாடுகளில் வசிக்கும் தெலுங்கர்கள் மற்றும் இந்தியர்கள் குறுகிய விடுமுறையில் இந்தியாவுக்கு வருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருப்பது கடினம். எனவே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
திருப்பதி மலையில் உள்ள சுபதம் வழியாக நேரடியாக நுழைவாயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவருக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் பாரம்பரிய உடை அணிய வேண்டும். இந்தியா வந்தது முதல் 30 நாட்களுக்குள் மட்டுமே சிறப்பு தரிசனம் வழங்கப்படும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் வழக்கம்போல் ரூ.300 தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்து கொள்ளலாம்.
நுழைவு வாயிலில் பதிவு செய்யும் போது சர்வதேச அல்லது இந்திய செல்போன் எண்களை வழங்குவது கட்டாயம். விசா வைத்திருந்தால் தாங்கள் வெளிநாட்டு இந்திய குடியுரிமை அல்லது அடையாள அட்டையை காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 61,583 பேர் தரிசனம் செய்தனர். 28,936 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.