50% வரிவிதிப்பு குறையுமா?: இந்தியா - அமெரிக்கா இடையே இன்று பேச்சுவார்த்தை
- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
- இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.