இந்தியா

காசா மக்களை பாதுகாக்கும் ஐநா சபை வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா- பிரியங்கா காந்தி கண்டனம்

Published On 2025-06-14 15:38 IST   |   Update On 2025-06-14 15:38:00 IST
  • காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60,000 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர்.
  • காசாவில் உள்ள மக்கள் பட்டினியால் இறக்கின்றனர்.

பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், "காசாவில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஐ.நா. சபை தீர்மானத்தில் நமது அரசாங்கம் கலந்து கொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடானது மற்றும் ஏமாற்றமளிக்கிறது.

காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60,000 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினியால் இறக்கின்றனர். ஆனால் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறோம்.

நெதன்யாகு ஒரு முழு நாட்டையும் அழித்தொழிக்கும் போது நாம் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல், அவரது அரசாங்கம் ஈரானை தாக்கி அதன் தலைமையை படுகொலை செய்வதையும், அதன் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதையும், அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் முற்றிலுமாக மீறுவதையும் நாம் உற்சாகப்படுத்துகிறோம்.

ஒரு தேசமாக, நமது அரசியலமைப்பின் கொள்கைகளையும், நமது சுதந்திரப் போராட்டத்தின் மதிப்புகளையும் நாம் எவ்வாறு கைவிட முடியும்?

இதற்கு எந்த நியாயமும் இல்லை. உலகளவில் தலைமை தாங்குபவர்களிடம் நீதியைப் பாதுகாக்க தைரியத்தை கோருகிறது. இந்தியா கடந்த காலங்களில் இந்தத் துணிச்சலைத் தவறாமல் காட்டியுள்ளது.

மக்களை பிளவுபடுத்தும் செயல் அதிகரித்து வரும் உலகில், மனிதகுலத்திற்காக நாம் நமது குரலை மீட்டெடுக்க வேண்டும். உண்மை மற்றும் அகிம்சைக்காக அச்சமின்றி நிற்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News