குளத்தில் மிதந்த நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள்.. ம.பி.யில் வெடித்த அரசியல் சர்ச்சை
- இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
- ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவரில் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
குளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது, குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பையை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்ததாகவும், அதைத் திறந்தபோது சுமார் 500 வாக்காளர் அடையாள அட்டைகளைக் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை 15வது வார்டை சேர்ந்தவர்களின் அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் என அதிகாரிகள் ஆய்வின்பின் உறுதிப்படுத்தி உள்ளனர்.
வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பே அட்டைகள் காணாமல் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட அனைத்து அட்டைகளும் உள்ளூர் நிர்வாகத்தின் வசம் உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே வாக்காளர் அடையாள அட்டைகள் அடங்கிய பைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவம் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .
நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள் குளத்தில் எப்படி விழுந்தன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சத்தர்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ககன் யாதவ் எச்சரித்தார்.