இந்தியா

பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது?: மத்திய அரசை சாடிய பிரியங்கா

Published On 2025-07-29 15:28 IST   |   Update On 2025-07-29 15:28:00 IST
  • மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
  • மக்களின் பாதுகாப்பில் உள்துறை அமைச்சகம் தோல்வி அடைந்துள்ளது என்றார் பிரியங்கா.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பிரியங்கா காந்தி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று மத்திய உள்துறை மந்திரி நேருவும் இந்திரா காந்தியும் என்ன செய்தார்கள் என்பது பற்றிப் பேசினார். என் தாயின் கண்ணீரைப் பற்றியும் அவர் பேசினார். ஆனால், போர் நிறுத்தம் ஏன் அறிவிக்கப்பட்டது என்று அவர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை.

மத்திய உள்துறை மந்திரி இன்று என் தாயின் கண்ணீரைப் பற்றிப் பேசினார். இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.

பயங்கரவாதிகள் என் தந்தையைக் கொன்றபோது என் தாயின் கண்ணீர் சிந்தியது. இன்று, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அந்த 26 பேரைப் பற்றி நான் பேசும்போது, அவர்களின் வலியை நான் உணர்ந்துள்ளேன்.

இந்த அரசாங்கம் எப்போதும் கேள்விகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. அவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் மீது பொறுப்புணர்வு இல்லை. உண்மை என்னவென்றால், அவர்களின் இதயத்தில் பொதுமக்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு எல்லாமே அரசியல், விளம்பரம்.

இன்று இந்த அவையில் அமர்ந்திருக்கும் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று பஹல்காமில், 26 பேர் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர்.

மக்களின் பாதுகாப்பில் உள்துறை அமைச்சகம் தோல்வி அடைந்துள்ளது. அன்று பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த அனைவருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. நீங்கள் எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், உண்மையை மறைக்க முடியாது என காட்டமாகப் பேசினார்.

Tags:    

Similar News