இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Published On 2022-12-08 15:16 GMT   |   Update On 2022-12-08 15:16 GMT
  • ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது
  • பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.

சிம்லா:

இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. 68 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த நவம்பர் 12-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. எனினும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியது. காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என கவர்ச்சி வாக்குறுதிகளை அக்கட்சி அளித்தது. ஆம் ஆத்மி கட்சிக்காக அதன் நிறுவனர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் பிரசாரம் செய்தனர். அந்த கட்சி 300 யூனிட் மின்சாரம், 6 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் என வாக்குறுதிகளை வாரி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ந்தேதி வாக்கு பதிவு நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து, குஜராத் சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து இமாச்சல பிரசேத தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால் பிற்பகல் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்றது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றதால் காங்கிரசின் வெற்றி உறுதியானது.

இரவு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்று உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 24 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதன்மூலம் இமாசல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து, காங்கிரசார் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சரவெடிகளை வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர். 

Tags:    

Similar News