இந்தியா

பரமக்குடி-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2025-07-01 18:26 IST   |   Update On 2025-07-01 18:26:00 IST
  • பரமக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள 46 கி.மீ. தூரம் 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
  • இத்திட்டத்தால் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும்.

சென்னை:

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரை –ராமேஸ்வரம்–தனுஷ்கோடி முனையம் ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை–பரமக்குடி வரையில் ஏற்கனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.

பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்– தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் பயண நேரம் 40 சதவீதம் குறையும். இத்திட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News