சிக்கிமில் கனமழை, நிலச்சரிவு.. 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
- சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுங்டாங்.
- அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்டாங்கில் சுமார் 200 சுற்றுலா வாகனங்கள் சிக்கித் தவிப்பதாகவும், பயணிகள் அங்குள்ள ஒரு குருத்வாராவில் தங்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
லாச்சென்-சுங்தாங் சாலையில் முன்ஷிடாங்கிலும், லாச்சுங்-சுங்தாங் சாலையில் லெமா பாப் பகுதியிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை வடக்கு சிக்கிமிற்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (ஏப்ரல் 25), சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியைப் பார்வையிட வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். லாச்சுங் மற்றும் லாச்சென் நகரங்களுக்கான போக்குவரத்து அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.