அரியானா காவல்துறை ஏடிஜிபி சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு தற்கொலை
- தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
- பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
சண்டிகர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் கூறுகையில், "பூரன் குமாரின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை நடந்த சமயத்தில், பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.