இந்தியா

குஜராத் கலவரம்- மோடி குற்றமற்றவர் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது

Published On 2022-06-24 09:22 GMT   |   Update On 2022-06-24 11:09 GMT
  • குஜராத் கலவரத்துக்கு மோடி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 64 பேர் தான் காரணம் என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
  • குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை

புதுடெல்லி:

குஜராத் மாநிலம் கோக்ரா என்ற இடத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கரசேவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மதக்கலவரம் மூண்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் இறந்தனர். கோக்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த மோசமான வன்முறை இதுதான்.

இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எக்சான் ஜாப்ரி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்தபோது குஜராத் மாநிலத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தார்.

இந்த கலவரத்துக்கு மோடி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 64 பேர் தான் காரணம் என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணை நடத்தி 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் குஜராத் கலவரத்தில் மோடி உள்ளிட்ட 64 பேருக்கு தொடர்பு இல்லை என்றும் இதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கலவரத்தின்போது கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜக்கியா ஜாப்ரி குஜராத் ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜகோர்ட்டு 2017-ம் ஆண்டுஅவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஜக்கியா ஜாப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், கலவரம் தொடர்பாக புதிய விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் கான் வில்சர், தினேஷ் மகேஸ்வரி, மற்றும் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இந்த வழக்கில் மேல் விசாரணை தேவையில்லை. மோடி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். விசாரணை குழு அறிக்கையை ஏற்று மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததை உறுதி செய்த ஜகோர்ட்டு உத்தரவு சரி தான் என்று தீர்ப்பு கூறினார்கள்.

Tags:    

Similar News