14 வயது சிறுவனை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கிய பாட்டியின் காதலன் கைது
- கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கஞ்சாவை பயன்படுத்த செய்திருக்கிறார்.
- அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபின் அலெக்சாண்டர். இவருக்கும், கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. மகளுக்கு திருமணமாகி மகன் உள்ள நிலையில் அந்த பெண், பிரபினை காதலித்து வந்ததாக தெரிகிறது.
அந்த பெண் தனது மகளுடன் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் தான் அந்த பெண்ணுக்கு பிரபினுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலன் என்ற பெயரில் பெண்ணின் வீட்டில் பிரபின் அடிக்கடி தங்கியிருந்திருக்கிறார்.
அப்போது அந்த பெண்ணின் பேரனான 14 வயது சிறுவனுக்கு போதை பொருட்களை பயன்படுத்த செய்திருக்கிறார். 9-ம் வகுப்பு படித்து வந்த அவனுக்கு, முதலில் கஞ்சாவை கொடுத்திருக்கிறார். அதனை பயன்படுத்த மறுத்ததால் அடித்து துன்புறுத்தி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கஞ்சாவை பயன்படுத்த செய்திருக்கிறார்.
பின்பு மதுபானம் மற்றும் ஹாஸிஸ் ஆயில் உள்ளிட்டவைகளையும் சிறுவனுக்கு கொடுத்து பயன்படுத்த செய்து போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி இருக்கிறார். போதைப்பொருட்கள் பயன்படுத்தியதால் தேவையில்லாமல் அதிகமாக கோபப்படுதல் உள்ளிட்ட செயல்களில் சிறுவன் ஈடுபட்டிருக்கிறான்.
இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தாய் அவனிடம் கேட்டபோது, பாட்டியின் காதலன் வலுக்கட்டாயப்படுத்தி தனக்கு போதைப்பொருட்களை கொடுத்துவந்த தகவலை தெரிவித்தான். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், அதுபற்றி கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரபின் அலெக்சாண்டரை கைது செய்தனர். அவர் மீது சிறார் நீதி சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.