இந்தியா

துணை ராணுவத்தில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- கொள்கை அளவில் அரசு ஒப்புதல்

Published On 2022-07-20 12:03 GMT   |   Update On 2022-07-20 12:03 GMT
  • அக்னிவீரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
  • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்

புதுடெல்லி:

சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படைகளில், அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.

'மத்திய ஆயுத காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் கான்ஸ்டபிள்கள் (பொதுப் பணி) மற்றும் ரைபிள்மேன் பதவிக்கான ஆட்சேர்ப்பில், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய மந்திரி நித்யானந்த ராய் கூறினார்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 14ம் தேதி வெளியிட்டது. 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய ஆயுத காவல் படை அல்லது துணை ராணுவத்தில் ஆட்சேர்ப்பின்போது, காலி பணியிடங்களில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News