கோப்புப்படம்
மூத்த குடிமக்களுக்கு இலவச காப்பீடு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
- கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.
தேசிய காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா" (AB PM-JAY) திட்டத்தின் கீழ் ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"இந்த ஒப்புதலுடன், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் AB PM-JAY திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியான மூத்த குடிமக்களுக்கு AB PM திட்டத்தின் கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும்," என்று அரசு சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே AB PM-JAY திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), மற்றும் ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஏற்கனவே உள்ள காப்பீடு திட்டம் அல்லது புதிய காப்பீடு திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
மத்திய அரசு அறிவிக்கையின் படி AB PM-JAY திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.