இந்தியா

குடிபோதையில் தினமும் அடித்து துன்புறுத்திய தந்தை.. கோடரியை கொண்டு கொலை செய்த 15 வயது மகள்

Published On 2025-04-25 13:23 IST   |   Update On 2025-04-25 13:23:00 IST
  • பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அழுதுகொண்டே, தனது தந்தையை யாரோ கொன்றுவிட்டதாகவும், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.
  • கைது செய்யப்பட்ட சிறுமி சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

சத்தீஸ்கரில் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜஷ்பூர் மாவட்டத்தில், பாக்பஹார் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 50 வயது நபர் கடந்த ஏப்ரல் 21 இரவு ஆம் தேதி தனது வீட்டில் கோடரியால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.

அந்த நபரின் 15 வயது மகள் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அழுதுகொண்டே, தனது தந்தையை யாரோ கொன்றுவிட்டதாகவும், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கியது. சிறுமியின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த போலீஸ், தாயின் முன்னிலையில் சிறுமியை விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டுள்ளது.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, தந்தை தினமும் மது போதையில் சிறுமியையும், தாயாரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். ஏப்ரல் 21 ஆம் தேதி தாய் வெளியே சென்றிருந்த நிலையில் இரவு 9 மணியளவில் குடிபோதையில் வீடு திரும்பிய தந்தை சிறுமியை அடிக்கத் தொடங்கினார். கோபத்தில், வீட்டில் வைத்திருந்த கோடரியால் தனது தந்தையின் தலையில் சிறுமி தாக்கியதன் விளைவாக அவர் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று (வியாழக்கிழமை) சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

Tags:    

Similar News