இந்தியா

சாலையில் தொழுகை செய்ய அனுமதி பெறுகிறார்களா?.. ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளுக்கு தடை குறித்து காங்கிரஸ் தலைவர் கேள்வி

Published On 2025-10-18 21:48 IST   |   Update On 2025-10-18 21:48:00 IST
  • முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
  • இதுகுறித்து சித்தராமையா விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதுகுறித்து விளக்கம் அளித்த சித்தராமையா, ஆர்எஸ்எஸ்க்கு மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் யாரும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த தடை குறித்து ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என். ராஜன்னா இதை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைதானங்களிலும் சாலைகளிலும் தொழுகை நடத்துவதற்கு முஸ்லிம்கள் அரசிடம் அனுமதி பெறுவார்களா ? அல்லது முதலில் அனுமதி பெறச் சொன்னால் அவர்கள் கேட்பார்களா?, அமல்படுத்தக்கூடிய விதிகளை மட்டுமே அமல்படுத்த வேண்டும்.

இந்த விதி எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பார்போம்" என்று தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பதவியில் இருந்து ராஜன்னா நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News