ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்- மாமியார் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மருமகள்
- மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.
- ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் சி.எச்.குன்னே பள்ளியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது கணவர், மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது மருமகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன், பேத்திளுடன் வசித்து வந்தார்.
ஆதிலட்சுமியை அவருடைய மருமகள் ஸ்ரீதேவி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஆதிலட்சுமி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய யாரும் இல்லை. இதனால் மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.
ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கொள்ளிக்குடம் உடைத்து ஸ்ரீதேவி கொள்ளிவைத்தார். இதனைக் கண்ட கிராம மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மாமியாரும் மருமகளும் கீரியும், பாம்புமாக உள்ள காலத்தில் மாமியாருக்கு மருமகள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.