இந்தியா

நாட்டில் ஊழலை ஆரம்பித்ததே காங்கிரஸ் தான்: பசவராஜ் பொம்மை கடும் தாக்கு

Published On 2022-11-23 03:35 GMT   |   Update On 2022-11-23 03:35 GMT
  • ஆடு மேய்ப்பவர்களின் நலனுக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்கிறது.

பெங்களூரு :

சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆடு மேய்ப்பவர்களின் நலனுக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள், மீனவர்களின் குழந்தைகளுக்கு வித்யாநிதி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண் திறன் திட்டத்தின் கீழ் 5 லட்சம் பெண்களுக்கு வேலை, சுவாமி விவேகானந்தா யுவசக்தி திட்டத்தின் கீழ் 5 லட்சம் இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்கிறது.

தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். விவசாயத்திற்கு நீர், இளைஞர்களுக்கு வேலை மற்றும் மக்களுக்கு சுயமரியாதை வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பது தான் அரசின் நோக்கம். நாங்கள் 7 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். பத்ரா மேலணை திட்டம் தேசிய திட்டமாக விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி கிடைக்கும். நாங்கள் கல்விக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. வாணிவிலாஸ் சாகர் அணை கால்வாய்களை தரம் உயர்த்த ரூ.738 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கால்வாய்கள் நவீன மயமாக்கப்படும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் நீர் கிடைக்கும். இந்த அணை பகுதியில் அழகான பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்ரா மேலணை திட்டத்தில் இந்த அணைக்கு ஆண்டுக்கு 5 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வழங்கப்படும்.

சித்ரதுர்காவில் 1,000 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்த பகுதி மக்களின் பொருளாதாரம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் வருகிற ஜனவரி மாதம் தொடங்கும். நாட்டில் ஊழலை ஆரம்பித்ததே காங்கிரஸ் தான். லோக்அயுக்தா அமைப்பை மூடிவிட்டு ஊழல் தடுப்பு படையை தொடங்கினர்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

Similar News