பஞ்சாப் அரசு டெல்லிக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பியதாக காங். தலைவர் குற்றச்சாட்டு: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு
- பஞ்சாப் அரசு டெல்லிக்கு கோடிக்கணக்கில் பணத்தை அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு.
- அரியானா, ராஜஸ்தான் வழியாக டெல்லிக்கு வருவதாக பகீர் தகவல்.
டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் செலவு செய்வதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பணம் கடத்தப்பட்டதாகவும், தன்னை ஆம் ஆத்மி உளவு பார்ப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் சக்சேனா மாநில காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தீப் தீக்ஷித் தனது குற்றச்சாட்டில் "பஞ்சாப் அரசின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியில் அடிக்கடி தென்படுகிறார்கள். அவர்கள் தொடர்புடைய அதிகாரப்பூர்வ வாகனங்கள் அடிக்கடி வட்டமடிக்கின்றன. இது தன்னை மிரட்டுவதாகவும், கண்காணிப்பதாகவும் தோன்றுகிறது.
பஞ்சாப் அரசு கோடிக்கணக்கிலான பணத்தை டெல்லிக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான அனுப்பியுள்ளது. பஞ்சாப் போலீஸ் பாதுகாப்புடன் தனியார் வாகனங்கள் அரியானா, ராஜஸ்தான் வழியாக டெல்லிக்கு வருகிறது" எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் சக்சேனா, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும், பஞ்சாப் மாநில எல்லைகளில் பரிசோதனை மேற்கொள்ளும்படியும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில டிஜிபி-களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் அல்லது தேர்தல் தொடர்பான முறைகேடுகளைக் குறிக்கும் எந்தவொரு அசாதாரண நகர்வுகளையும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மாநில செயலாளர் தேர்தல் நெருங்கும் வேலையில் கண்காணிப்பு பணியை அதிகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.