இந்தியா

ராகுல் காந்தியை வீழ்த்த வயநாட்டில் போட்டிபோட்டு பிரசாரத்தில் ஈடுபடும் கம்யூ-பா.ஜனதா வேட்பாளர்கள்

Published On 2024-03-28 09:12 GMT   |   Update On 2024-03-28 10:29 GMT
  • வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
  • காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இதன் காரணமாக அனைவரின் பார்வையும் வயநாடு தொகுதியில் பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்து விட்டது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தனது பிரசாரத்தை ஆனி ராஜா தொடங்கிவிட்டார்.

அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து அவரும் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் ராகுல் காந்தியை தோற்கடித்து, வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்ற முனைப்பில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேவேளையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை. அவர் ஏப்ரல் 3-ந்தேதி வயநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது வருகைக்கு பின் வயநாடு தொகுதி தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும். அதே நேரத்தில் ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே ராகுல்காந்தியை தாக்கி பேசுவதையும், அவரை தொகுதி மக்கள் விரும்பவில்லை என்று கருத்து கூறியபடியும் தங்களின் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தொகுதியில் இருப்பதையே விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆனி ராஜா கூறியதாவது:-

நான் தொகுதியில் இருப்பேனா அல்லது தற்போதைய எம்.பி. போன்று விருந்தினராக இருப்பேனா? என்பதை இங்குள்ள வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நான் அவர்களுடன் தான் இருப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி சுரேந்திரன் கூறும்போது, 'தேர்தலில் வெற்றி பெற்றால் முழு காலத்துக்கும் வாக்காளர்களுடன் இருப்பேன். தற்போது பதவியில் இருப்பவரை போல் எம்.பி.யாக இருக்க முடியாது. செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்தாலும், பின்தங்கிய பாராளுமன்ற தொகுதிக்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதில் எம்.பி.யாக ராகுல்காந்தி தோல்வியடைந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்' என்றார். 

Tags:    

Similar News