வெனிசுலா மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு: பினராயி விஜயன் கண்டனம்
- வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு.
- உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.
வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.
இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.
மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், "வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.
இது ஒரு முரட்டு நாட்டின் கொடூரமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. தனது சூழ்ச்சித் திட்டங்களைத் திணிப்பதற்காக, உலக தென்பகுதியில் வெளிப்படையான விரோதத்தைத் தூண்டிவிடுகிறது. இது ஒரு பயங்கரவாதச் செயலும் கூட. இதுபோன்ற தாக்குதல்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும் எதிர்த்துப் போராடிய நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு கண்டமான லத்தீன் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.