காற்று மாசினால் குழந்தைகள் மூச்சுத் திணறுகின்றனர்.. ஏன் பொறுப்பில்லாமல் இருக்கிறீர்கள்? - ராகுல்
- உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது
- நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது.
டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தீபாவளி அன்று பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாஜக அரசு வழக்கு தொடர்ந்து சாதகமாக தீர்ப்பு பெற்றது. எனவே பல வருடம் கழித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையை ஆர்வலர்கள் விமர்சித்தனர். தீபாவளிக்கு பின் டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் செயற்கை மழை பெய்ய செய்ய ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் டெல்லி ஐஐடி மேற்கொண்ட சோதனை தோல்வி அடைந்தது.
கடந்த சில வாரங்களாகவும், இன்றும் டெல்லி காற்றின் தரம் AQI 400 ஐ தாண்டி 'மிகவும் மோசம்' என்ற வகையை அடைந்துள்ளது.
இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காற்று மாசினால் ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலை குறித்து மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மோடியின் பாராமுகம் குறித்து விமர்சித்துள்ளார்.
டெல்லியில், தாய்மார்கள் சிலருடன் தனது வீட்டில் ராகுல் காந்தி காற்று மாசு குறித்து கலந்துரையாடி அதன் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், நான் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் என்னிடம் ஒரு விஷயத்தை தான் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தை மாசுபட்ட காற்றை சுவாசித்து வளர்வது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் பயத்துடனும், கோபத்துடன், ஏதும் செய்ய முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.
மோடி அவர்களே,"இந்தியாவின் குழந்தைகள் நமது கண் முன்னே மூச்சுத்திணறி கொண்டுள்ளனர். நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். இந்த பிரச்சனையில் உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், காற்று மாசு விவகாரம் குறித்த பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் செய்யப்பட வேண்டும். இதை சுகாதார அவசரநிலையை கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது, எனவே இந்த விஷயத்தில் இனியும் எந்த சாக்கு போக்குகளும், திசை திருப்புதலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.
வரும் வாரத்திலும் டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையிலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.