இந்தியா

வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கி விட்டு மோசடி: கப்பல் கட்டுமான நிறுவன தலைவர் கைது

Published On 2022-09-22 02:17 GMT   |   Update On 2022-09-22 02:17 GMT
  • இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
  • பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.2,468.51 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி :

வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்றவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பவர், குஜராத் மாநிலம், சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் தள நிறுவனமான 'ஏ.பி.ஜி. ஷிப் யார்டு' தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் ஆவார்.

இவர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 842 கோடி கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.2,468.51 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடி என கருதப்படுகிறது.

'எர்ணஸ்ட் அண்ட் யெங்' நிறுவனம் நடத்திய தடயவியல் ஆய்வில், 2012 முதல் 2017 காலகட்டத்தில், ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, அரசு பதவிகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை அரங்கேற்றி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

வங்கிக்கடனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக பெற்றுக்கொண்டு, அதற்கு செலவிடாமல் பிற வழிகளில் செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரிஷி கமலேஷ் அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது.

Tags:    

Similar News