இந்தியா

கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பில் இருந்து விலகுகிறார் டி.கே.சிவகுமார்!

Published On 2025-11-20 11:15 IST   |   Update On 2025-11-20 11:15:00 IST
  • நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.
  • நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் நேற்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் கர்நாடகாவில் நேற்று இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கர்நாடகா துணை முதல்-மந்திரியும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே.சிவகுமார் பங்கேற்று பேசினார்.

அப்போது டி.கே. சிவகுமார் பேசுகையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு மற்ற தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் டி.கே.சிவகுமார் கூறுகையில், நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. டெல்லி மேலிடம் ஆர்வம் காட்டிய எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை என்னிடம் கேட்டுள்ளனர். ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அனுப்புகிறேன். சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர், சிலர் ஆர்வம் காட்டவில்லை, சிலர் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு டெல்லி மேலிடம் ஒரு பதிலைக் கொடுக்கும்.

எனது பதவிக் காலத்தில் குறைந்தது 100 காங்கிரஸின் அலுவலகங்களையாவது கட்டுவேன். நான் அங்கே இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அது முக்கியமல்ல என்றார்.

இதனிடையே, தனது பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்களிடையே பேசிய டி.கே. சிவகுமார்,

* நான் இங்கு (கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ) நிரந்தரமாக இருக்க முடியாது. நான் உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.

* நான் 5.5 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன், மார்ச் மாதத்தில், நான் 6 ஆண்டுகளை நிறைவு செய்வேன்.

* மற்றவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட வேண்டாம், நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன். நான் முன்னணியில் இருப்பேன்.

* நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.

* கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையை இழக்காதீர்கள்.

* நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

* நமக்கு அதிகாரம் கிடைக்கும், கவலைப்படாதீர்கள். ஆனால் அதை அடைய நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

2020-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றதுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முதலில் திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News