இந்தியா

கர்நாடகாவில் டீசல் விலை உயர்வு... முதலமைச்சர் சித்தராமையாவை கிண்டலடித்து பாஜக பதிவு

Published On 2025-04-03 06:39 IST   |   Update On 2025-04-03 06:39:00 IST
  • கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
  • ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், டீசல் விலை உயர்வை விமர்சிக்கும் விதமாக கர்நாடக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், "சித்தராமையாவை காஸ்ட்லீ டீசல் என்று கிண்டலடித்த பாஜக, வின் டீசல் என்றால் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast & Furious), சித்தராமையா ஸ்கேம் அண்ட் இன்ஜுரியஸ் (scam and injurious)" பாஜக விமர்சித்துள்ளது.

Tags:    

Similar News