இந்தியா

என்னை பா.ஜனதாவினர் அவமதித்து விட்டனர்: லட்சுமண் சவதி குற்றச்சாட்டு

Published On 2023-04-15 02:16 GMT   |   Update On 2023-04-15 02:16 GMT
  • பா.ஜனதாவில் இருந்து விலகிய லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார்.
  • சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் அதானி தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மகேஷ் குமட்டள்ளிக்கு அக்கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார். அவர் நேற்று தனது எம்.எல்.சி. பதவியையும் ராஜினாமா செய்தார். கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அதற்கு முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை பெங்களூருவில் நேரில் சந்தித்து தான் காங்கிரசில் சேர விரும்புவதாக கூறினார். இதை அக்கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் லட்சுமண் சவதி கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டி.கே.சிவக்குமார் ஆகியோரின் முன்னிலையில் லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடியை வழங்கி காங்கிரசில் சேர்த்து கொண்டனர். அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'பா.ஜனதாவில் இருந்து விலகிய லட்சுமண் சவதி தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று(நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளார். வட கர்நாடகத்தில் பலம் வாய்ந்த தலைவராக இருக்கிறார். பா.ஜனதா தலைவர்கள் அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை. அவர் எந்த விதமான நிபந்தனையும் விதிக்காமல் கட்சியில் சேர்ந்துள்ளார்' என்றார்.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், 'அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையை ஏற்று லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்துள்ளார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் பா.ஜனதா அரசு இந்த முறை 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது' என்றார்.

இதையடுத்து லட்சுமண் சவதி பேசுகையில், 'நான் பா.ஜனதாவில் 25 ஆண்டுகள் இருந்தேன். அந்த கட்சியில் இருந்து விலகி இன்று (நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது தொகுதி மக்கள், காங்கிரசில் சேரும்படி கூறினா். அதனால் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். பா.ஜனதாவில் எப்படி பணியாற்றினேனோ அதே போல் காங்கிரசிலும் கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றுவேன். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் தோல்வி அடைந்தேன். கட்சி மேலிட தலைவர்கள் என்னை அழைத்து எம்.எல்.சி. ஆக்கி துணை முதல்-மந்திரி பதவி வழங்கினர். பின்னர் என்னை கட்சியில் இருந்து நிராகரித்து, துணை முதல்-மந்திரி பதவியையும் பறித்து, அதானி தொகுதியில் டிக்கெட் கொடுக்காமலும் ஏமாற்றி அவமதித்து விட்டனர். சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

Tags:    

Similar News