குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக அரசு.. மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை குறித்து ராகுல் காந்தி
- 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
- தலைமறைவான எஸ்.பி. கோபால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த வியாழன் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
இந்த வழக்கில் குற்றமசாட்டப்பட்டு தலைமறைவான எஸ்.பி. கோபால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மகாராஷ்டிராவின் சதாராவில் டாக்டர் சம்பதா முண்டே துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டது, எந்தவொரு நாகரிக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் ஒரு சோகம்.
மற்றவர்களின் துன்பத்தைத் தணிக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் அமைப்பிற்குள் குற்றவாளிகளின் சித்திரவதைக்கு பலியானார்.
குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளனர்.
அறிக்கைகளின்படி, பாஜகவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள் அவரை ஊழலுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்ட குற்றவியல் சித்தாந்தத்தின் மிகவும் இழிவான உதாரணம் இது. இது தற்கொலை அல்ல, அமைப்பு ரீதியான கொலை.
அதிகாரம் குற்றவாளிகளைக் காப்பாற்றும்போது, யார் நீதியை எதிர்பார்க்க முடியும்? டாக்டர் சம்பதாவின் மரணம் இந்த பாஜக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது.
நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் இனி பயம் இல்லை, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.