இந்தியா

பால்தாக்கரேயின் கட்சியை அழிக்க பா.ஜனதா விரும்புகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

Published On 2022-08-06 03:20 GMT   |   Update On 2022-08-06 03:20 GMT
  • மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே என சிவசேனா கூறியுள்ளது.
  • சிவசேனா 25 ஆண்டுகளாக பா.ஜனதாவை தோளில் சுமந்து வந்தது.

மும்பை :

சிவசேனா 2 ஆக உடைந்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது. கட்சி உடைந்ததற்கு பா.ஜனதா தான் முக்கிய காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா உள்ளிட்ட குடும்ப கட்சிகள் அழிந்துவிடும் என பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேசியிருந்தார்.

இந்தநிலையில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பிறகு ஒட்டு மொத்த உலகமே அப்போதைய அந்த மாநில முதல்-மந்திரி மோடிக்கு எதிராக நின்றது. ஆனால் இந்துத்வாவுக்காக மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே என சிவசேனா கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

குஜராத் கலவரத்தின் போது அவரது சொந்த கட்சியினரே அவருக்கு ராஜ தர்மத்தை பற்றி யோசனை கூறினர். அந்த நேரத்தில் 'ராஜ தர்மத்தை ஓரமாக வையுங்கள், மோடி மீது கைவைக்க கூடாது. அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க கூடாது' என கூறியவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே. குஜராத் கலவரத்திற்கு பிறகு பால் தாக்கரே தான் மோடிக்கு ஆதரவாக நின்றார்.

தற்போது நீங்கள் (பா.ஜனதா) சிவசேனாவை அழிக்க விரும்புகிறீர்கள்?. சிவசேனா 25 ஆண்டுகளாக பா.ஜனதாவை தோளில் சுமந்து வந்தது. இன்று 2 கட்சிகளுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜனதா மராட்டியத்தில் பால்தாக்கரேவின் பெயரை பயன்படுத்தி வருகிறது.

பா.ஜனதாவால் சிவசேனாவுடன் மோத முடியாது என்பதால், அவர்களை அமலாக்கத்துறை மூலம் பயம் காட்டி கட்சியை உடைத்து உள்ளனர். உங்களுக்கு அதிகம் பேர் கிடைக்கலாம். ஆனால் பால் தாக்கரேயின் சிவசேனா மீண்டும் வான் உயரத்தை அடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News