இந்தியா

பெங்களூருவில் பயங்கரம்: பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை.. குப்பை லாரியில் வீசப்பட்ட உடல்

Published On 2025-06-30 10:31 IST   |   Update On 2025-06-30 10:31:00 IST
  • பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது.
  • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக மாநகராட்சியின் குப்பை லாரியை நிறுத்துவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று இரவும் குப்பை லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். அதிகாலையில் ஒரு நபர் குப்பையை போடுவதற்காக அங்கு வந்தார். அப்போது குப்பை லாரியின் பின்புற பகுதியில் ஒரு சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் தலை தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி உடனடியாக அவர் சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து குப்பை லாரியில் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, ஒரு பெண்ணை கொன்று, அவரது கை, கால் கட்டப்பட்டு, உடல் சாக்கு மூட்டைக்குள் திணித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவம் பற்றி தெரிய வந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இதனால் அந்த பெண் கழுத்தை நெரித்தோ அல்லது மூச்சை திணறடித்தோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டி-சர்ட், பேண்ட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இருந்த நிறுவனத்தின் பெயர் மூலமாக போலீசார் விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பெண் உளிமாவு அருகே வசித்து வந்த புஷ்பா என்ற ஆஷா என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததும் தெரியவந்தது.

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இளம்பெண் புஷ்பா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவரை வேறு இடத்தில் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் திணித்து குப்பை லாரியில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.

எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட புஷ்பாவின் கணவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News