வேலை வாங்கித் தருவதாக கூறி 56 இளம்பெண்களை ரெயிலில் கடத்த முயற்சி - பகீர் சம்பவம்
- இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.
- பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎப்) சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பெட்டியில் இளம் பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் யாரிடமும் டிக்கெட்கள் இல்லை. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது. மேலும் இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.
சந்தேகமடைந்த ஆர்பிஎப் அதிகாரிகள், அந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதன்பின் நடந்த விரிவான விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரெயிலில் இருந்த அப்பெண்களை, பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர். வேலையில் அமர்த்துவதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.
அப்பெண்கள் அனைவரும் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கூச் பெஹர் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனைத்து பெண்களும் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மொத்தம் 56 பெண்களை போலீசார் மீட்டு அவர்களின் குடும்பங்களிடம் சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஆணும் , பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.