சோனியா காந்தியிடம் இருந்து நேரு கடிதங்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை: மத்திய அரசு தகவல்
- மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
- அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.
அதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு நேருவின் முக்கியமான கடிதங்களை சோனியா காந்தி குடும்பத்தினர் திரும்பப் பெற்றனர். அருங்காட்சியக இயக்குநரின் ஒப்புதலுக்குப் பிறகு 51 அட்டைப் பெட்டிகளில் நேருவின் ஆவணங்கள் சோனியா காந்தியிடம் வழங்கப்பட்டது.
அதில், இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன், சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் தலித் தலைவர் ஜெகஜீவன் ராம் போன்றவர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் உள்ளன. அந்தக் கடிதங்களை சோனியா காந்தி அருங்காட்சியகத்திற்கு திருப்பி தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோனியா காந்தியிடம் இருந்து பிரதமர் நேருவின் கடிதங்களை திரும்பப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.