இந்தியா

கைது, "ED" காவல் சட்டவிரோதம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

Published On 2024-03-23 13:08 GMT   |   Update On 2024-03-23 16:46 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
  • நீதிமன்றம் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (மார்ச் 21-ந்தேதி) அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்தனர்.

நேற்று டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏழு நாள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வருகிற 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி, அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இந்த நிலையில் இன்று மாலை டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "அமலாக்கத்துறை கைது செய்தது. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது சட்டவிரோதம்.

விசாரணையில் இருந்து விடுவிக்க அவருக்கு தகுதி உண்டு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிறு என்பதால் அதற்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீதிமன்றம் கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும், ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்துவேன். விரைவில் விடுதலையாகி டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News