சாதிவாரி கணக்கெடுப்பு: காலக்கெடு, விவரங்களை அறிவிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
- 50 சதவீதம் என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும்.
- தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பிரிவை அமல்படுத்த வேண்டும்.
நாடு தழுவிய அளவில் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், மத்திய அரசு இந்த விசயத்தில் மவுனம் காத்து வந்தது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. தங்களின் வற்புறுத்தல் காரணமாக மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுபுக்கான காலக்கெடு, கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 50 சதவீதம் என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் அரசிலமைப்பின் 15(5) பிரிவை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.