இந்தியா

அண்ணா பல்கலை மாணவி வழக்கு - அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி

Published On 2025-11-04 12:10 IST   |   Update On 2025-11-04 12:10:00 IST
  • வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
  • மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு 8 மணியளவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்பவர் ஆண் நண்பரை விரட்டிவிட்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளதாக கூறி இருந்தார்.

அண்ணாமலை இப்படி பேசியதை வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்று பேட்டி அளித்ததாகவும், ஆனால் அந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆதாரங்களை வழங்கவில்லை. எனவே இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதுதொடர்பாக நீதிபதி, நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. இதுபோன்று அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும். இதற்காக நேரத்தை வீணாக்க வேண்டாம். ஞானசேகரன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தார். மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News