டேக் ஆஃப்-ஆன உடனேயே அபாய அழைப்பு விடுத்த விமானி
- விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் (Gatwick) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 2 பைலட்கள் உள்பட 12 ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
அகமதாபாத்- லண்டன் காட்விக் விமானம் AI171 விபத்துக்குள்ளானது என்று விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கப்போவதை அறிந்து விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானியிடம் இருந்து அபாய அழைப்பு MAYDAY CALL சென்றுள்ளது.
பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் கொடுத்துள்ளதாகவும், விமானியின் அபாய தகவலை அறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்துக்குள்ளாகி உள்ளது. இதை தொடர்ந்து மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார். க்ளைவ் குந்தர் என்பவர் விமானத்தின் முதல் அதிகாரி எனப்படும் துணை பைலட் ஆவார். சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.