அகமதாபாத் விமான விபத்து: விசாரணைக்கு உதவ முன்வந்த ஐ.நா - வேண்டாம் என மறுத்த இந்தியா!
- விபத்து குறித்து இதுவரை இந்திய அரசு ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை மட்டுமே நடத்தியுள்ளது.
- அதில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.
அகமதாபாத்தில் ஜூன் 12 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்து விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) உதவியை இந்தியா நிராகரித்துள்ளது.
260 பேர் உயிரிழந்தஇந்த விபத்து உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் இங்கிலாந்து உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில், ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) இந்த விபத்து விசாரணையில் உதவுவதற்காக தனது ஒரு புலனாய்வாளரை இந்தியாவிற்கு அனுப்ப முன்வந்தது.
வழக்கமாக, ஐ.நா.விடம் உதவி கோரப்பட்ட பிறகே இதுபோன்ற உதவிகளை வழங்கும். ஆனால் இந்த முறை, ஐ.நா. தானாக முன்வந்து உதவியை வழங்கியது. அந்த புலனாய்வாளருக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்க ஐ.சி.ஏ.ஓ. கோரியிருந்த நிலையில், இந்திய அதிகாரிகள் அதனை மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கியமான பிளாக் பாக்ஸ் தரவு பகுப்பாய்வில் தாமதம் ஏற்படுவதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில் ஐ.நா. உதவியை இந்தியா மறுத்தது தெரியவந்தது.
விபத்து குறித்து இதுவரை இந்திய அரசு ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை மட்டுமே நடத்தியுள்ளதாகவும், அதில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையே விமான விபத்து நடந்த சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பிளாக் பாக்ஸ் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர், இந்தியா அனைத்து ஐ.சி.ஏ.ஓ. நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும், முக்கியமான நிகழ்வுகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.