"எனது வாழ்வில் இருண்ட தினம்.." மகன் உயிரிழப்பு - வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் உருக்கமான பதிவு
- தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
- அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் (49) காலமானார்.
சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் விபத்தில் சிக்கினார்.
இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
தனது மகனின் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று என் வாழ்வின் இருண்ட நாள். தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒரு மகன் தனது தந்தைக்கு முன்பே செல்வது இயற்கை அல்ல. அவர் வெறும் என் மகன் மட்டுமல்ல, என் நண்பன் மற்றும் பெருமையும் கூட" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், " நாட்டில் எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்த்தமுள்ள வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டோம்.
நாங்கள் சம்பாதிப்பதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானதை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்போம் என்று அக்னியிடம் நான் உறுதியளித்திருந்தேன்.
இன்று, அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அக்னிவேஷின் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.