பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம்? - வீடியோ வைரலானதால் 42 வயது நபர் எடுத்த விபரீத முடிவு
- வீடியோ சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
- தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தீபக் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.