விசாகப்பட்டினத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி
- சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
- இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலத்தில் உள்ள கோவிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
வராஹலட்சுமி நரசிம்ம சுவாமியின் நிஜரூப தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது ரூ.300 டிக்கெட் வழங்கும் வரிசையில் அமைக்கப்பட்டு இருந்த 20 அடி நீள சுவர் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறினர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.