இந்தியா

சனாதன தர்மம் விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பிய பெங்களூரு கோர்ட்

Published On 2024-02-02 15:22 GMT   |   Update On 2024-02-02 15:22 GMT
  • பெங்களூரு சிறப்பு கோர்ட் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
  • அந்த சம்மனில் மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்கவேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தர்மபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்திற்கு எதிரான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்கவேண்டும் என்று பேசியுள்ளார்.

அவரது பேச்சு அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளியான நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள சூழலில், இந்து தர்மத்தின் மீதான பக்தியும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற பேச்சுக்கள் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும். உதயநிதி ஸ்டாலினை மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News