பெண் கலப்புத் திருமணம் செய்ததால் அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடிக்கப்பட்ட அவலம்
- "சுத்திகரிப்பு சடங்கு" என்ற பெயரில் மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
- மொட்டை அடித்த குடும்ப உறுப்பினர்கள் வயலில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவில் ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நாற்பது பேர் "சுத்திகரிப்பு சடங்கு" என்ற பெயரில் மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த சம்பவம் ராயகடா மாவட்டத்தில் உள்ள காசிபூர் வட்டாரத்தின் பைங்கனகுடா கிராமத்தில் நடந்தது.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சமீபத்தில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணம் கிராம மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, குடும்பத்தை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கியது.
பெண் வீட்டார் மீண்டும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால், சுத்திகரிப்பு சடங்கைச் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரினர். அவர்கள் மறுத்தால், காலவரையற்ற சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கிராம மக்கள் அச்சுறுத்தினர்.
கிராம மக்களின் அழுத்தத்தின் காரணமாக, குடும்பத்தினர் உள்ளூர் தெய்வத்தின் முன் சடங்குப்படி விலங்குகளை பலியிட்டனர். அதைத் தொடர்ந்து மொட்டை அடிக்கும் சடங்கு நடைபெற்றது.
மொட்டை அடித்த குடும்ப உறுப்பினர்கள் வயலில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் செய்தி பரவியதும், காசிபூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) விஜய் சோய் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒடிசாவில் உள்ள பர்கர் மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்த ஒருவரின் இறுதி சடங்குகளை அவரது குடும்பத்தினர் நடத்த அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா அரசு கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ₹2.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.