செய்திகள்

மோடி மந்திரிசபையில் ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி

Published On 2019-05-30 09:52 GMT   |   Update On 2019-05-30 09:52 GMT
தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து மோடி 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார்.

ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

மோடியுடன் மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். 50-60 பேர் வரை அவரது மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மந்திரி சபையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர், ஜே.பி.நட்டா, ஹர்ஸ்வர்தன், பாபுல் சுப்ரியோ ஆகியோர் மீண்டும் மத்திய மந்திரிகளாக பதவியேற்கிறார்கள்.

உடல்நலம் சரியில்லாததால் அருண்ஜெட்லி மீண்டும் மந்திரியாக விரும்பவில்லை. இதை அவர் மோடியிடம் உறுதிப்படுத்தினார்.



பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் மோசமான தோல்வியை தழுவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தேனி தொகுதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரை பிரதமர் அலுவலகத்துக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

தமிழக பா.ஜனதாவுக்கு மற்றொரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News