செய்திகள்

ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது பற்றி விமர்சனம்- மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு

Published On 2019-04-06 06:46 GMT   |   Update On 2019-04-06 06:46 GMT
பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. #LokSabhaElections2019 #PMModi #EC #RahulGandhi #Congress
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக ராகுல் வயநாடுக்கு ஓடி இருப்பதாக கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியும் இது தொடர்பாக வார்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், அவர்களது ஓட்டுக்களை நம்பித்தான் ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார்” என்றார்.

பிரதமர் மோடி கடந்த 1-ந்தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



சாதி, மதத்தை குறிப்பிட்டு யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்பது முக்கிய விதிகளில் ஒன்றாகும். இந்த நடத்தை விதியை பிரதமர் மோடி திட்டமிட்டு மீறி பிரசாரம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வியும் உறுதிப்படுத்தினார்.

பிரதமர் மோடி 1-ந்தேதி வார்தா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “இந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது” என்றும் பேசி இருந்தார்.

மோடியின் இந்த பேச்சையும் குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடிக்கும், மராட்டிய மாநில தேர்தல் அதிகாரிக்கும் இது தொடர்பாக நோட்டீசு அனுப்பப்படும் என்று தெரிகிறது. #LokSabhaElections2019 #PMModi #EC #RahulGandhi #Congress
Tags:    

Similar News