செய்திகள்

டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது- தலைமை தேர்தல் ஆணையம்

Published On 2019-01-24 06:16 GMT   |   Update On 2019-01-24 06:16 GMT
டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #SC #EC #TTVDhinakaran
புதுடெல்லி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அந்த சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாக பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தினகரன் தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். ஆனால் குக்கர் சின்னம் ஒதுக்குவதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் டிடிவி தினகரனின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கீரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை ஒரு தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது என்றும், பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பட்ட ஒரு கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. #SC #EC #TTVDhinakaran
Tags:    

Similar News