செய்திகள்

கர்நாடகத்தில் இன்று அரசு பஸ்கள் ஓடுகின்றன - பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை

Published On 2019-01-08 05:10 GMT   |   Update On 2019-01-08 05:30 GMT
கர்நாடகத்தில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. #BharatBandh
பெங்களூரு:

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூருவில் இருந்து 2,543 ஊர்களுக்கு வழக்கமாக 3,300 பஸ்கள் இயக்கப்படும்.

இன்று தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் 1,104 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் ரெயிலும், மெட்ரோ ரெயிலும் இயக்கப்பட்டது.

வேலைநிறுத்தம்  காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

இதேபோல பெங்களூரு பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சிகள் இன்று வழக்கம்போல் ஓடின. தபால் மற்றும் வங்கி அலுவலகங்கள் திறந்து இருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதேபோல கர்நாடக அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

வேலை நிறுத்தத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் இன்று சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை.

கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். #BharatBandh
Tags:    

Similar News