தமிழ்நாடு செய்திகள்
தொடர் போராட்டம் - ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை
- வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.
கல்வித் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.