தெலுங்கானா சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி மீண்டும் 2 நாட்கள் பிரசாரம்
நகரி:
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி ஆகிய 4 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதற்கு மெகா கூட்டணி என்று பெயரிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 28, 29-ந்தேதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தெலுங்கானாவில் ராகுல் காந்தி பிரசாரத்தில் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளதாக கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல்காந்தி தெலுங்கானாவில் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி வருகிற 3 மற்றும் 5-ந்தேதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். 3-ந்தேதி மெகாபூபாபாத், கரீம் நகர் மாவட்டங்களிலும், 5-ந்தேதி நல்கொண்டா மாவட்டங்களிலும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். மேலும் ரோடு ஷோவும் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். #Telanganaassemblypolls #rahulgandhi