2025 - ஒரு பார்வை

2025 REWIND: நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

Published On 2025-12-27 11:00 IST   |   Update On 2025-12-27 11:00:00 IST
  • டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது.
  • கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார்.

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு செப்.9-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

 

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். பாராளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

 

இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மகாராஷ்டிர ஆளுநராக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

 

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி விலகிய ஜெகதீப் தன்கரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். கடந்த ஜூலை 21-ந்தேதி துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

சி.பி.ராதாகிருஷ்ணன் முழு விவரம்:

தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு மே 4-ந்தேதி பிறந்தார். 16-வது வயதில் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். 1974-ம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. செயலாளராக பதவி வகித்தார். கடந்த 1998, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் கோவை தொகுதியில் இருந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் ஐ.நா. சபைக்கான இந்திய குழுவில் இடம் பெற்றார்.

கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது சுமார் 19,000 கி.மீ தூரத்துக்கு ரத யாத்திரை நடத்தினார்.

நதிகள் இணைப்பு, தீவிரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டம், போதை ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். கடந்த 2016-ல் கொச்சியில் செயல்படும் தென்னை நார் வாரியதலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2023-ல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார். 2024-ல் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது துணை ஜனாதிபதியாக அவர் பதவியேற்று உள்ளார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 3 பேர் புதிதாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனையும் சேர்த்து இதுவரை 15 பேர் துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர்.

கடந்த 1952 முதல் 1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கடந்த 1984 முதல் 1987 வரை வெங்கட்ராமன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இப்பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2030-ம் ஆண்டு செப்டம்பர் வரை அவர் பதவியில் நீடிப்பார்.

அரசியல் வாழ்க்கையை தாண்டி சி.பி.ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகளாகும்.

Tags:    

Similar News