செய்திகள்

குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரிடம் பா.ஜனதா புகார்

Published On 2018-09-21 22:45 GMT   |   Update On 2018-09-21 22:45 GMT
வீதிக்கு வந்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மீது அரசியல் சாசன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா புகார் அளித்தது. #Kumaraswamy
பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். இதைக் கண்டித்த பா.ஜனதா, குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

மேலும் எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களை போராடத்தூண்டியதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா சார்பில் கர்நாடகா முழுவதும் நேற்று பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் மாநில கவர்னர் வஜூபாய் வாலாவை, மத்திய மந்திரி சதானந்த கவுடா, பா.ஜனதா முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஷோபா, முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.


அப்போது அவர்கள் ஒரு புகார் மனுவை கவர்னரிடம் வழங்கினர். அதில், “ஒரு கட்சிக்கு (பா.ஜனதா) எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியே பேசுகிறார். இதுபோல் ஒரு முதல்-மந்திரியே பேசுவது மிக ஆபத்தானது.

மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவின் வீட்டின் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே அரசியல் சாசன சட்டத்தின்படி முதல்-மந்திரி குமாரசாமி மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.  #Kumaraswamy #BJP #Yeddyurappa
Tags:    

Similar News